
அமராவதி: டிசம்பர் 12-
ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். நீண்ட நேரமாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த 22 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என அல்லூரி சீதாராம ராஜு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்தார். சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள், பத்ராசலம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்ததுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
விபத்து குறித்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், சித்தூர் அருகே யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. விபத்து குறித்து அதிகாரிகளிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்த விவரங்களையும் அறிந்து கொண்டேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்யும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.














