
டெல்லி, ஜூன் 19- 2023-24ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வி செயல்திறன் தரக் குறியீட்டில் தமிழ்நாடு 16வது இடத்தில் இருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டை விடவும் சண்டிகர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்டவை சிறந்த செயல்திறனுடன் செயல்படுவதாகவும், தெலங்கானா, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் மிகக்குறைந்த செயல்திறனுடன் செயல்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாட்டை மதிப்பிட செயல்திறன் தரக் குறியீடு மத்திய கல்வி அமைச்சகத்தால் கடந்த 7 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022-23 மற்றும் 2023-2024 ஆகிய கல்வியாண்டுக்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல் திறன் குறியீடு வெளியாகி இருக்கிறது. மாணவர் உரிமைகள், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், பள்ளி மற்றும் குழந்தை பாதுகாப்பு, நிர்வாக செயல்பாடு, வகுப்பறை செயல்பாடுகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உள்ள 74 அளவுகோல் அடிப்படையில் இந்த செயல்திறன் குறியீடு மதிப்பிடப்படுகிறது. இதன்பின் 2023-24ஆம் ஆண்டில் 1,000க்கு 703 புள்ளிகள் பெற்று சண்டிகர் முதலிடத்தில் உள்ளது. இதன்பின் பஞ்சாப் 631.2 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தில்லி 623.7 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து குஜராத் 614.4 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், ஒடிசா 595./6 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், 594.2 புள்ளிகளுடன் கேரளா 6வது இடத்திலும், 592.2 புள்ளிகளுடன் டாமண்டையூ 7வது இடத்திலும், 591.4 புள்ளிகளுடன் ஹரியானா 8வது இடத்திலும், 589.7 புள்ளிகளுடன் கோவா 9வது இடத்திலும் உள்ளன. அதேபோல் 582 புள்ளிகளுடன் மகாராஷ்டிரா 10வது இடத்திலும், 581.5 புள்ளிகளுடன் 11வது இடத்திலும் உள்ளனர். இந்த பிரிவில் புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, லட்சத்தீவுகள், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சராசரி செயல்திறன் கொண்ட மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.