
பழநி: ஏப்ரல் 22-
பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா புதன்கிழமை காலை (ஏப்.22) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயில் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை (இன்று) சங்கு, சக்கரம், கருடாழ்வார் படம் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கோயில் உதவி ஆணையர் செந்தில் குமார், கண்காணிப்பாளர் அழகர் சாமி, கந்த விலாஸ் உரிமையாளர் செல்வ குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்.28-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம், ஏப்.30-ம் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது. மே 1-ம் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறும்.
அன்று சித்ரா பவுர்ணமியையொட்டி பெரிய நாயகியம்மன் கோயிலில் இருந்து காலை 8 மணிக்கு மேல் திருஆவினன்குடி கோயிலுக்கு 108 பால் குடங்கள் எடுத்து வருதல், அன்று இரவு 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் வீதியுலா நடைபெற உள்ளது.


















