
கொழும்பு, பிப். 16- ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பீல்டிங்கை தேர்வு செய்தார்.பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சல்மான் அலி ஆகா வீசிய முதல் ஓவரில் 4 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காத நிலையில் மிட் ஆன் திசையில் ஷாகின் ஷா அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய திலக் வர்மா நிதானமாக விளையாடினார். ஷாகின் ஷா அப்ரிடி வீசிய 2-வது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டினார். இந்த ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட்டன. சல்மான் அலி ஆகா வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் ஒரு பவுண்டரி விரட்ட இந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. சைம் அயூப் வீசிய 4-வது ஓவரில் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். அப்ரார் அகமது வீசிய 5-வது ஓவரில் இஷான் கிஷன் ஒரு பவுண்டரி விரட்ட இந்த ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்டரிகள் அடிக்க பவர்பிளே முடிவில் இந்திய அணி 52 ரன்கள் சேர்த்தது. அப்ரார் அகமது வீசிய 7-வது ஓவரில் இஷான் கிஷன் 3 பவுண்டரிகளை விரட்டினார். மட்டையை சுழற்றிய இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதம் விளாசினார். ஷதப் கான் வீசிய 8-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விளாசி அசத்தினார் இஷான் கிஷன். இந்த ஓவரில் 17 ரன்கள் குவிக்கப்பட்டன. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 40 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் சைம்அயூப் பந்தில் போல்டானார்.



















