பாகிஸ்தான் கபடி வீரருக்கு விரைவில் தடை.. கொந்தளித்த ரசிகர்கள்

இஸ்லாமாபாத், டிச. 19- பஹ்ரைனில் நடந்த தனியார் கபடி போட்டி ஒன்றில், பாகிஸ்தான் சர்வதேச கபடி வீரரான உபைதுல்லா ராஜ்புத், “இந்தியா” என்று பெயரிடப்பட்ட அணிக்காக விளையாடியதோடு, இந்திய ஜெர்சியை அணிந்து, இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்திய சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. டிசம்பர் 16 அன்று பஹ்ரைனில் ‘ஜிசிசி கோப்பை’ (GCC Cup) என்ற பெயரில் தனியார் கபடி தொடர் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் பெயரில் தனியார் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஒரு அணிக்கு “இந்தியா” என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த அணிக்காக பாகிஸ்தான் வீரர் உபைதுல்லா ராஜ்புத் களமிறங்கினார். அவர் இந்திய ஜெர்சி அணிந்து விளையாடிய புகைப்படங்களும், இந்தியக் கொடியை அசைப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதைப் பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள், அவரை “துரோகி” என்று திட்டித் தீர்த்து வருகின்றனர். பாகிஸ்தான் கபடி சங்கம் ஆவேசம் இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் கபடி சங்கம் (PKF) கடும் கோபத்தில் உள்ளது. இதுகுறித்து பேசிய சங்கத்தின் செயலாளர் ராணா சர்வார், “இது ஒரு தனியார் தொடர் தான். இந்தியா, பாகிஸ்தான், கனடா என அணிகளுக்கு பெயர் வைத்துள்ளனர். ஆனால், அந்தந்த நாட்டு வீரர்கள் தான் அந்த அணிகளில் ஆட வேண்டும்.
இந்திய தனியார் அணியில் இந்தியர்கள் தான் ஆட வேண்டும். ஆனால், ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய அணிக்காக, இந்திய ஜெர்சி அணிந்து ஆடுவது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. இது குறித்து வரும் டிசம்பர் 27ம் தேதி அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். மேலும், கபடி சங்கத்திடம் அனுமதி (NOC) பெறாமல் 16 பாகிஸ்தான் வீரர்கள் பஹ்ரைன் சென்றுள்ளதும் அம்பலமாகியுள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.
சர்ச்சை பெரிதானதைத் தொடர்ந்து உபைதுல்லா ராஜ்புத் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனக்கு ஆரம்பத்தில் அந்த அணியின் பெயர் ‘இந்தியா’ என்று தெரியாது. அமைப்பாளர்கள் தான் அப்படி பெயர் வைத்தனர். நான் தெரிந்தே இதை செய்யவில்லை. இதற்கு முன் நடந்த தனியார் போட்டிகளில் இந்திய மற்றும் பாக். வீரர்கள் ஒன்றாக இணைந்து ஆடியுள்ளனர். ஆனால் இப்படி நாட்டின் பெயரை பயன்படுத்தியதில்லை. தற்போதைய சூழலில் நான் இந்தியாவுக்காக ஆட நினைத்து கூட பார்க்க மாட்டேன். இது ஒரு தவறான புரிதல்” என்று விளக்கம் அளித்துள்ளார்.