பாகிஸ்தான் – சீனாவை திருப்திப்படுத்த இந்திய மேப்பை நீக்கிய அமெரிக்கா

வாஷிங்டன், பிப். 11- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் பகுதியுடன் வெளியிட்ட இந்திய மேப்பை அமெரிக்கா திடீரென்று நீக்கி உள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் சீனா ஹேப்பியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு விதித்த 50 சதவீத வரியை வெறும் 18 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நம் நாடும், அமெரிக்காவும் சேர்ந்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து கூட்டறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக United States Trade Representative என்ற அமெரிக்காவின் எக்ஸ் வலைதள பக்கத்தில் அப்டேட்டுகள் வழங்கப்பட்டன. அதில் நம் நாட்டின் வரைபடம் (மேப்)வெளியிடப்பட்டது. அதில் நம் நாட்டுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupied Kashmir or POK) மற்றும் சீனா உரிமை கொண்டாடும் அக்சாய் சின் பகுதிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் வசம் உள்ள நிலையில் அக்சாய் சின் பகுதிக்கு சீனா உரிமை கோரி வருகிறது. இந்த விஷயத்தில் இருநாடுகளுக்கும், நமக்கும் பிரச்சனை உள்ளது. இது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். இப்படியான சூழலில் தான் அமெரிக்கா அந்த 2 இடங்களையும் நம் நாட்டுக்கு சொந்தமானது என்று வரைபடம் வெளியிட்டது. இதற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் தான் தற்போது அந்த வரைபடம் நீக்கப்பட்டுள்ளது.