நியூயார்க், ஆகஸ்ட் 13- அமெரிக்கா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின.
இந்த பாராட்டு, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (TRF) அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. லஷ்கர்-இ-தைபாவின் கிளையான TRF அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு (FTO) மற்றும் குறிப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி (SDGT) என அமெரிக்கா அறிவித்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புச் செயலாளர் நபீல் முனிர் தலைமை தாங்கினார்.
அமெரிக்கா சார்பில் பயங்கரவாத எதிர்ப்புக்கான மாநிலத் துறையின் பொறுப்பு ஒருங்கிணைப்பாளர் கிரிகோரி டி லோகெர்ஃபோ இணைத் தலைமை தாங்கினார். அமெரிக்கா பாகிஸ்தான் உறவில் டிரம்ப் ஆட்சியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சந்திப்புக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் ஆதரவு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட நேற்று இரவோடு இரவாக டிரம்ப் இந்தியாவின் முதுகில் குத்தி இருக்கிறார். பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை (BLA) ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பிஎல்ஏ எனப்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் குறிப்பாக ராணுவத்தை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால்,
இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது முனீரின் அமெரிக்க பயணத்தின்போது என்பது குறிப்பிடத்தக்கது.

















