டெல்லி: நவம்பர் 17
பீகார் சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியை பெற்ற நிலையில் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் நிதிஷ்குமார். பாஜக முதல்வர் பதவி கேட்பதாக தகவல் வெளியான நிலையில் நிதிஷ் குமாரே பதவி ஏற்பது உறுதியாகியிருக்கிறது. அதே நேரத்தில் ஜேடியுவை விட அதிக அமைச்சர் பதவிகளை கேட்டு பெற்றுள்ளது பாஜக. 6 எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் பாஜக எம்எல்ஏக்கள் 16 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். ஜேடியூ தரப்பில் 14 பேரும், லோக் ஜனா சக்தி (ராம்விலாஸ்) கட்சியின் சார்பில் மூன்றுபேர் அமைச்சர்கள் பதவியேற்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் பாஜக தரப்பில் இரண்டு துணை முதலமைச்சர் பதவிகளும் கேட்டு பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் சட்டசபை தேர்தல் முடிவில் ஜேடியூ – பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வென்ற அபார வெற்றியை ருசித்துள்ளது. எதிரணியான ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியோ வெறும் 35 இடங்களையே பெற்றது. இதனால், பிஹாரில் என்டிஏ அரசு அமைவது உறுதியான நிலையில்,, பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக மற்றும் ஜேடியு தலைவர்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பீகார் என்டிஏ அரசு நேற்று பாட்னாவில் மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் உள்பட பாஜக உயர்நிலைத் தலைவர்கள் அனைவரும் நிதிஷ் குமாரை சந்தித்து விரிவான ஆலோசனையில் ஈடுபட்டனர். இதே நேரத்தில் மற்ற கூட்டணி கட்சிகளான லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்திய அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் அமைச்சர் பதவி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மகராஷ்டிரா பாணியில் பீகாரில் அதிக இடங்களில் வென்றதால் பாஜக முதல்வர் பதவி கேட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், பீகாரில் மிரட்டினால், மத்திய அரசுக்கு பிரச்சினை வரும் என்பதால், நிதிஷ்குமார் தான் முதல்வர் என பாஜகவும் சொல்லி விட்டது.















