புதுடெல்லி: செப் 27-
வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த பிஎஸ்என்எல் 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என் நிறுவனத்தின் 4ஜி சேவையை ஒடிஸா மாநிலத்தில் உள்ள ஜார்சுகுடா மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டென்மார்க், ஸ்வீடன், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் பட்டியலில் இந்தியா 5 ஆவது நாடாக இணையவுள்ளது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 97,500 தளங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவை பிஎஸ்என்எல் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 29 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கிராமங்களுக்கு 100 சதவீத 4ஜி சேவை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள 14 ஆயிரத்து 180 4ஜி வலைபின்னல் கோபுரங்களையும் மோடி திறந்து வைக்கிறார். இதன் மூலமாக குறைந்த கட்டணத்தில் 120 கோடி வாடிக்கையாளர்களுக்கு இணைய மற்றும் தொலைபேசி அழைப்பு சேவைகளை வழங்கி வரும் நாடாக இன்று இந்தியா உருவெடுக்கவுள்ளது. இதனால், 5ஜி சேவையையும் மிகவும் எளிமையாக அறிமுகப்படுத்த முடியும். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இது ஒரு வரலாற்று நாள். பிரதமர் மோடி இன்று ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். அது பிரதமர் தலைமையில் உலகத்திற்கும், உலக சமூகத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பாக இருக்கும் என்றார்.
பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ள 97500 செல்போன் கோபுரங்களில் 92,600க்கும் மேற்பட்ட கோபுரங்கள் உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டது. இதனை எளிதாக 5ஜி சேவைக்கு மேம்படுத்தலாம். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம், பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இணைந்து 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட 4ஜி கோபுரங்களை நிறுவியுள்ளன. 14,180 4ஜி கோபுரங்கள் எண்ம பாரத நிதியின்கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















