சென்னை: டிசம்பர் 19- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மவுனம் காத்து வரும் நிலையில், பாஜக – தவெக இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படவில்லை. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
தற்போது, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய், இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார். அதேநேரத்தில், திமுகவின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளாமல், தவெகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என தொடக்கம் முதலே பாஜக வலியுறுத்தி வந்தது. மேலும், பல்வேறு தரப்பினரும், விஜய் இந்த விவகாரத்தில் வாய் திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால், விஜய் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
அதேநேரத்தில், விஜய் மவுனமாக இருப்பதே நல்லது என தவெகவில் புதிதாக இணைந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது, பாஜக – தவெகவினரிடையே வார்த்தை போரை ஏற்படுத்தி உள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, அண்ணாமலை கூறுகையில், ‘கம்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கம்முன்னு இருக்கணும். கும்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கும்முன்னு இருக்கணும் என விஜய் ஒரு படத்தில் வசனம் பேசியிருப்பார். ஆனால், எல்லா இடங்களிலும் விஜய் கம்முன்னு இருப்பது சரியல்ல. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேசவே மாட்டேன் என்றால் அது எந்த மாதிரியான அரசியல். வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்’, என தெரிவித்திருந்தார்.
இதற்கு தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், ‘திருப்பரங்குன்றம் விவகாரம் தேவையில்லாத பிரச்சினை. தமிழக மக்கள் ஒற்றுமை உடன் தான் இருக்கிறார்கள்.
இதில் ஆதாயம் தேட பாஜகவும், திமுகவும் முயற்சிக்கிறது. மேலும், அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார். எங்கள் கட்சி தலைவர் எப்போது எதை பேச வேண்டுமென்று அவர் சொல்ல தேவையில்லை. தலைவருக்கு தெரியும்’, என தெரிவித்தார்.















