
புதுடெல்லி: மே 16-
எரிசக்தி பயன்பாட்டை மிச்சப்படுத்த வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் வாகன ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.
இதன் மீதான நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட பாஜக பிரமுகருக்கு அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேற்காசிய போரின் நெருக்கடி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்த நெருக்கடியின் மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட பிரதமர் மோடி, தங்க நகைகள் வாங்குவதைத் தள்ளிப்போடுமாறும், பெட்ரோல் மற்றும் டீசலை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார்.
இதை ஏற்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகள் தங்கள் வாகன பயன்பாட்டை குறைப்பது மற்றும் அத்தியாவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தையும் கடைப்பிடிக்கத் துவங்கி உள்ளனர். இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாஜக பிரமுகர் சவுபாக்ய சிங் தாக்கூர், பிரதமர் மோடியின் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டு, உஜ்ஜயினிலிருந்து போபாலுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொண்ட ஒரு ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றார்.
இவரை ம.பி முதல்வர் மோகன் யாதவ், அம்மாநிலப் பாடநூல் கழகத்தின் தலைவராக அமர்த்தி இருந்தார். இந்த பொறுப்பை ஏற்பதற்காக சவுபாக்ய சிங் தாக்கூர் சென்று கொண்டிருந்தார். இந்த காட்சிப்பதிவுகள் உடனான செய்தி ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவின் பேரில், சவுபாக்யா சிங்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதில், தேசிய நலன் சார்ந்த வேண்டுகோளைப் புறக்கணித்ததற்காவும், அரசின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாததற்காகவும் விளக்கம் கேட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சவுபாக்யா சிங்கிற்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ம.பி அரசின் பாடநூல் கழகத்தின் அலுவலகம் அல்லது வளாகத்திற்குள் சவுபாக்ய சிங் நுழைவதற்கு, மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கழகத்திற்குச் சொந்தமான எந்தவொரு வசதியையும், வாகனத்தையும், ஊழியரையும் அல்லது அலுவலகத்தையும் அவர் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அவர், கழகம் தொடர்பான எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கவோ அல்லது தலைமை தாங்கவோ முடியாது. கழகத்தின் நிர்வாகம் அல்லது நிதி சார்ந்த முடிவுகள் எதிலும் பங்கேற்பதோ அல்லது கையெழுத்திடுவதோ, மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.


















