Home செய்திகள் தேசிய செய்திகள் போதுமான எண்ணிக்கை இல்லை என தெரிந்தும் முயற்சிக்கும் பாஜக!

போதுமான எண்ணிக்கை இல்லை என தெரிந்தும் முயற்சிக்கும் பாஜக!

டெல்லி, ஏப்ரல் 17- தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும், எதற்காக இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது? பாஜகவின் திட்டம் என்ன? என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு மொத்தம் 3 மசோதாக்களை தாக்கல் செய்திருக்கிறது. மூன்றும் அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள்தான். இதனை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 3ல்2 பங்கு ஆதரவு தேவை. 1. 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2026 இதன் நோக்கம், 2023-ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவதற்கு வழிவகுத்தல். இதற்கு முன் இருந்த சட்டப்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகே இடஒதுக்கீடு அமலாகும் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்த புதிய திருத்தம், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காகக் காத்திருக்காமல், தொகுதி மறுவரையறை (Delimitation) மூலம் 33% இடஒதுக்கீட்டை 2029 பொதுத்தேர்தலிலேயே அமல்படுத்த அதிகாரம் அளிக்கிறது. 2. தொகுதி மறுவரையறை மசோதா, 2026 இதன் நோக்கம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைத்தல். மக்களவை இடங்களின் எண்ணிக்கையைத் தற்போதைய 543-லிருந்து 816 அல்லது 850 ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இதன் மூலம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் பிரிக்கப்படுவதால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் (தமிழ்நாடு உட்பட) பிரதிநிதித்துவம் குறைந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கின்றன. 3. யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 இதன் நோக்கம் டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்களிலும் 33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல். அமித் ஷா அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, யூனியன் பிரதேசங்களின் நிர்வாகச் சட்டங்களில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த 3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4 மணிக்கு லோக்சபாவில் நடைபெறுகிறது.