Home செய்திகள் தேசிய செய்திகள் பிஹாரில் நீட் வினாத்தாள் விவகாரம்: ராகுல் காந்தி கண்டனம்

பிஹாரில் நீட் வினாத்தாள் விவகாரம்: ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: செப். 7-
பிஹாரில் நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கடந்த ஜூலை 25ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. சிவான் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின் போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாணவர்கள், கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து கேட்டு அறிந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். இதனுடன் வெளியிட்ட பதிவில், “காவல் துறையினர் ஏகே-47 துப்பாக்கியால் சுட்டதில், ஒரு மாணவரின் கால் எலும்பு முறிந்து அவரது ராணுவக் கனவு பாழானது.
மற்ற இரு மாணவர்களின் தோள்களில் தோட்டாக்கள் பாய்ந்தன. தங்களின் எதிர்காலமே சீரழிந்துவிட்டதாக அந்த மாணவர்கள் கண்னீருடன் தெரிவித்தனர்.
அவர்களின் உளவியல் அதிர்ச்சிக்கும் நொறுங்கிய கனவுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடியும், பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியும் பதில் சொல்வார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். நியாயமான கோரிக்கைகளை கேட்கும் மாணவர்கள் மீது “லத்தியும் தோட்டாவும்” பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, சுயாதீன விசாரணை நடத்தவும் வலியுறுத்தியுள்ளார்.