பீகார் தேர்தல்.. அடித்து தூக்கும் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: அக். 11-
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், சி வோட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விருப்பமான முதல்வராக 36 சதவிகிதம் பேர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை தேர்வு செய்துள்ளனர். இதனால் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய 38 சதவிகிதம் பேர் வரை ஆதரவு இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் பீகாரில் அத்தனை அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதேபோல் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மறுபக்கம் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தரப்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சி வோட்டர் தரப்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் மக்களிடையே யார் முதல்வராக வர வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ்க்கு சுமர் 36.2 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.