Home மாவட்டங்கள் பெங்களூர் பீன்யா மேம்பாலம்: கனரக வாகனங்கள் செல்ல விரைவில் அனுமதி

பீன்யா மேம்பாலம்: கனரக வாகனங்கள் செல்ல விரைவில் அனுமதி

பெங்களூரு: ஜூன் 10-
துமகூரு சாலையில் உள்ள பீண்யா மேம்பாலம் (டாக்டர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மேம்பாலம்) முழுமையாக பலப்படுத்தப்பட்டு, கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வகையான வாகனங்களும் தடையின்றி செல்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை-4ல் அமைந்துள்ள இந்த பீண்யா மேம்பாலம், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏதோ ஒரு காரணத்திற்காக தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வந்தது. மேம்பாலத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது வாரம் முழுவதும் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பாக செல்லும் அளவுக்கு பாலம் வலுவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
பாலத்தின் தாங்குதிறனை அறிய நடத்தப்பட்ட ‘லோடு டெஸ்டிங்’ உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் மேம்பாலம் வெற்றி பெற்றுள்ளது. இந்த பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், பாலத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில், அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் சென்றதால், 8-வது மைல் சந்திப்பு அருகே உள்ள 102 மற்றும் 103-வது தூண்களுக்கு இடையே இரண்டு கேபிள்கள் வளைந்து சேதமடைந்தன. இதனால் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பையைச் சேர்ந்த ‘பிரெசினேட்’ நிறுவனத்திடம் இந்த சீரமைப்புப் பணி ஒப்படைக்கப்பட்டது.
முதற்கட்டமாக, 120 தூண்களுக்கு இடையே தலா இரண்டு வீதம் 240 புதிய கேபிள்கள் பொருத்தப்பட்டன.
தொடர்ந்து, 7.5 கி.மீ நீளமுள்ள இந்த மேம்பாலத்தின் ஒவ்வொரு தூணிலும் தலா 10 கேபிள்கள் வீதம் மொத்தம் 1,200 கேபிள்கள் மாற்றப்பட்டு பாலம் முழுமையாக பலப்படுத்தப்பட்டது.
மேம்பாலத்தின் பாரம் தாங்கும் திறனை சோதிக்க, தலா 30 டன் எடை கொண்ட 6 லாரிகள் (மொத்தம் 180 டன்) பயன்படுத்தப்பட்டன. கடந்த மே 5-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்குப் படிப்படியாக இந்த லாரிகளை மேம்பாலத்தின் மீது நிறுத்தி ‘லோடு டெஸ்டிங்’ நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பாலம் நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.