
வாஷிங்டன்: ஆக. 19-
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழி குறித்து விவாதிக்க புடினுக்கும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான நேரடி சந்திப்புக்கான ஏற்பாடு தொடங்கி உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். பின்னர் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போர் முடிவடையும். அது எப்போது முடிவடையும் என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. ஆனால் போர் விரைவில் முடிவுக்கு வரும். இந்த மனிதர் (ஜெலென்ஸ்கி) போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்.
முழு உலகமும் உக்ரைன்-ரஷ்யா போரால் சோர்வடைந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். நான் 6 போர்களை முடித்துள்ளேன். ஒருவேளை இது (உக்ரைன்-ரஷ்யா போர்) எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அது எளிதான ஒன்றல்ல. இது ஒரு கடினமான ஒன்று.
ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம் என்பதைத் தவிர்த்து, மொத்தம் ஆறு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். இந்த உக்ரைன்-ரஷ்யா போரை நாங்கள் முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழி குறித்து விவாதிக்க புடினுக்கும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான நேரடி சந்திப்புக்கான ஏற்பாடு தொடங்கி உள்ளது. இது கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆரம்பமாக அமையும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார். வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், கூறியதாவது: உக்ரைனுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா பங்கேற்காமல் தவிர்த்தால் அதிக வரிகள் மற்றும் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும், என்றார். இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: பாதுகாப்பு உத்தரவாதங்களில் அமெரிக்காவின் ஈடுபாடு மிக முக்கியமானது. அமெரிக்கா ஒரு தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது மிக முக்கியம், என்றார்.