
ஹாசன்: ஜூன் 15-
கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ஷெட்டி பள்ளி பகுதியில், ஹேமாவதி ஆற்றின் உபரி நீரில் குளிக்கச் சென்ற பெங்களூர் இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த சரண் (20), மிலன் (23) மற்றும் மணிகண்டா (20) ஆகியோரே உயிரிழந்த துரதிர்ஷ்டசாலி இளைஞர்கள் ஆவர். இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால், பெங்களூருவைச் சேர்ந்த 10 இளைஞர்கள் கொண்ட குழுவினர் ஒரு ‘டிராவலர்’ வாகனத்தில் சுற்றுலா புறப்பட்டுள்ளனர். முதலில் தர்மஸ்தலா சென்று ஸ்ரீ மஞ்சுநாத சுவாமியைத் தரிசனம் செய்துள்ளனர்.
அங்கிருந்து மீண்டும் பெங்களூரு திரும்பும்போது, வழக்கமான ஹாசன் வழியில் செல்லாமல், ஹேமாவதி ஆற்றின் உபரி நீர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் மற்றும் ஷெஹள்ளி சர்ச்சைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளனர்.
நேற்று மாலை நேரத்தில் இளைஞர்கள் அனைவரும் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். இவர்களில் சிலருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. ஆற்றின் ஆழம் தெரியாமல் எதிர்பாராதவிதமாக 3 இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கரையில் இருந்த மற்ற நண்பர்கள், அவர்களைக் காப்பாற்றப் போராடினர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனால், நண்பர்களின் கண் முன்னாலேயே 3 இளைஞர்களும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கொரூர் போலீசாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர். உள்ளூர் நீச்சல் வீரர்களின் உதவியோடு 3 இளைஞர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.
உடற்கூறாய்வுக்காக உடல்கள் ஹாசன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கொரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


















