Home செய்திகள் தேசிய செய்திகள் பெங்களூர் ஆட்டோ டிரைவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர் ஆட்டோ டிரைவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜூன் 12-
பெங்களூருவில் 19 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் திருவிழாவின போது இடி, மின்னலுடன் பெய்த மழையின் போது, சாலையோர மரக்கிளை முறிந்து விழுந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நெஞ்சை உருக்கும் விபத்து பற்றிய விவரம் வருமாறு:
கடந்த 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி, பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கே.கே.உமேஷ் குமார் என்பவர், சின்னசுவாமி கிரிக்கெட் மைதானம் அருகே சவாரிக்கு காத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த மழை கொட்டியது. மழையில் இருந்து தப்பிக்க அங்கிருந்த ஒரு பழைய மரத்தின் நிழலில் அவர் ஆட்டோவை நிறுத்தினார்.
அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக அந்த ராட்சத மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து ஆட்டோவின் மீது பயங்கரமாக விழுந்தது. இதில் ஆட்டோ அடியோடு நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவுக்குள் இருந்த உமேஷ் குமாரின் முதுகுத்தண்டு வடம் (கடுமையாக) பாதிக்கப்பட்டு, அவர் உடல் நலம் இழந்து முற்றிலும் பக்கவாதத்தால் முடங்கினார்.
இதையடுத்து, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், அப்போதைய பெங்களூரு மாநகராட்சி ஆணையரை பொறுப்பாக்கி, தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி உமேஷ் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த மனுவை காலதாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி தள்ளுபடி செய்தது.
மனம் தளராத ஆட்டோ ஓட்டுநர், உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதனை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் ரூ.17.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்தத் தொகையை மாநகராட்சி 25%, தோட்டக்கலைத் துறை 25% மற்றும் ஆட்டோ காப்பீட்டு நிறுவனம் 50% எனப் பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. “மழை பெய்து மரக்கிளை விழுந்தது ஒரு இயற்கை பேரிடர், அது கடவுளின் செயல் இதற்கு மாநகராட்சியை எப்படி பொறுப்பாக்க முடியும்?” என்று வாதிட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாநகராட்சியின் வாதத்தை அதிரடியாக நிராகரித்தது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது:
நகரத்தில் உள்ள ஒவ்வொரு மரத்தையும் அதிகாரிகள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் மரங்களைப் பராமரிப்பது அதிகாரிகளின் கடமையாகும். மழை பெய்வது இயற்கையான ஒன்றுதான். எனவே, சாலையோர மரங்களின் தரத்தை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்திருக்க வேண்டும்.”
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.17.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.25 லட்சமாக உயர்த்தி, உயர் நீதிமன்றம் விதித்த அதே விகிதாச்சாரப்படி, அடுத்த 4 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது.
19 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு ஏழை ஆட்டோ ஓட்டுநருக்குக் கிடைத்துள்ள இந்த நீதி, பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.