Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூர் கிளப்புகளில் அழுகிய மீன்கள், கரப்பான் பூச்சிகள் – சுகாதார சீர்கேடு

பெங்களூர் கிளப்புகளில் அழுகிய மீன்கள், கரப்பான் பூச்சிகள் – சுகாதார சீர்கேடு

பெங்களூரு: ஆக. 26-
பெங்களூரில் உள்ள 10 பிரபல கிளப்புகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழல் கண்டறியப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனையின் போது பல கிளப்புகளில் கெட்டுப்போன மற்றும் அழுகிய மீன்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஃப்ரீஸர் மற்றும் உணவுப் பொருட்கள் வைக்கும் அறைகளில் கரப்பான் பூச்சிகள் படையெடுத்துக் கிடந்தன. சமையலறைகளில் கழிவுநீர் வெளியேறாமல் அடைபட்டு நின்றதால் கிருமித் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
இவற்றுடன் காலாவதி தேதி மற்றும் விலைப்பட்டியல் இல்லாத தானியங்கள், பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சைவ மற்றும் அசைவ உணவுகள் எந்தவிதப் பிரிப்பும் இன்றி ஒரே இடத்தில் கண்டபடி சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முன்னணி கிளப்புகளிலேயே இப்படிப்பட்ட முறைகேடுகள் நடப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கிளப்புகளுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யாவிட்டால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.