Home தலைப்பு செய்தி ஏரியில் 6 சடலங்கள் மீட்பு

ஏரியில் 6 சடலங்கள் மீட்பு

விஜயபுரா: ஆக. 26- குடும்ப தகராறு காரணமாக 6 பேர் கொண்ட குடும்பமே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. ஏரியில் சடலங்கலாக மிதந்த இந்த 6 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன. கர்நாடக மாநிலம்விஜய்பூர் நகர எல்லைப் பகுதியிலுள்ள பூதநாளா குளத்தில் 6 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த முழு குடும்பமும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இறந்தவர்கள் ஷோபா ஜாலகேரி (45), வித்யா (16), சுவர்ணா (14), கவுடேஷ் (10 – வாய் பேச முடியாதவர்), விகாஸ் (5) மற்றும் சானிகா (7) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த ஆகஸ்ட் 23 அன்று ஷோபாவிற்கும் அவரது கணவர் மலக்காரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறிவிட்டு ஷோபா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24 அன்று கிராமப்புறக் காவல் நிலையத்தில் அவர்கள் காணாமல் போனதாகப் புகார் பதிவானது.
இந்த நிலையில், இன்று பூதநாளா குளத்தில் 6 பேரின் உடல்களும் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று காலை நடைப்பயிற்சி வந்த சந்தோஷ் என்பவர் உடல்களைப் பார்த்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மண் நிம்பர்கி, முதற்கட்ட விசாரணையின்படி இது தற்கொலையாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நகர டி.ஒய்.எஸ்.பி நாகராஜ், ஆதர்ஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சீதாராம் லமாணி, காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களைக் குளத்திலிருந்து மீட்டு மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.