Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூர் விமான நிலையத்தில் ரூ.13 கோடி ‘ஹைட்ரோ கஞ்சா’ பறிமுதல்

பெங்களூர் விமான நிலையத்தில் ரூ.13 கோடி ‘ஹைட்ரோ கஞ்சா’ பறிமுதல்

பெங்களூரு: ஜூன் 15-
பேங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.13.14 கோடி மதிப்புள்ள அதிநவீன ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அடுத்தடுத்து சிக்கிய 2 சம்பவங்களின் பின்னணி விபரம் வருமாறு: கடந்த 11-ஆம் தேதி பேங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய 5 பயணிகளின் நடத்தை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்களை மடக்கிப் பிடித்து, சோதனை நடத்தினர்.
அவர்கள் கொண்டு வந்த ‘செக்-இன்’ லக்கேஜ் பேக்குகளை எக்ஸ்ரே ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. சுங்கத்துறை அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிப்பதற்காக, பேக்குகளுக்குள் ரகசிய அறை அமைத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றில் இருந்து ரூ.8.68 கோடி மதிப்புள்ள 24.8 கிலோ எடையுள்ள அதிநவீன ‘ஹைட்ரோ கஞ்சா’ பறிமுதல் செய்யப்பட்டது. உடனே அந்த 5 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கடந்த 13-ஆம் தேதி அதே பேங்காக்கில் இருந்து வந்த மற்றொரு விமானப் பயணியை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர்.
அவரது கைப்பை மற்றும் லக்கேஜ் பேக்குகளை பிரித்து பார்த்தபோது அதிகாரிகளுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ‘வேக்யூம் பேக்’ செய்யப்பட்டு காற்றுப் புகாதவாறு அடைக்கப்பட்டிருந்த ரூ.4.74 கோடி மதிப்புள்ள 13.54 கிலோ ஹைட்ரோ கஞ்சா சிக்கியது. உடனே அந்தப் பயணியும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி வேட்டையில், மொத்தம் ரூ.13.14 கோடி மதிப்புள்ள 38.34 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச போதைப்பொருள் மாஃபியா கும்பலின் பின்னணியில் பெங்களூருவில் இருப்பவர்கள் யார்? பெங்களூரு நகரின் எந்தெந்த பகுதிகளுக்கு இந்த போதைப்பொருள் சப்ளை செய்யப்பட இருந்தது? என்பது குறித்து கைதான கும்பலிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.