பொருளாதார குற்றங்களில் மும்பைக்கு முதலிடம்

மும்பை, அக். 2- நம் நாட்டில், பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் சார்பில், ஆண்டுதோறும் நாடு முழுதும் பதிவாகும் குற்ற வழக்குகளின் புள்ளி விபரங்களை வெளியிடுவது வழக்கம். இதன்படி, -பொருளாதாரம், சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு முடிவுகளை சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்டது.அதன் விபரம்: கடந்த 2023ல் நம் நாட்டில் நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில், 27,675 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, தெலுங்கானா, 26,321 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோல் 19,803 நிதி மோசடி வழக்குகளில் மஹாராஷ்டிரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. எனினும், கடந்த 2023ல் பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை, 6,476 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.