நியூயார்க், செப்டம்பர் 3- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்துகொண்ட சீன ராணுவ அணிவகுப்பையொட்டி இந்த விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் பதிவிட்ட கருத்தில், சீனாவின் சுதந்திரத்திற்காகப் பல அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “சீனாவுக்கு வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்க அமெரிக்கா அளித்த மகத்தான ஆதரவையும், சிந்திய ரத்தத்தையும், சீன அதிபர் ஷி ஜின்பிங் நினைவு கூர்வாரா என்பதே இங்கு எழும் பெரும் கேள்வி. சீனாவின் வெற்றி மற்றும் பெருமைக்கான தேடலில் பல அமெரிக்கர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர்” என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். “அவர்களின் துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் உரிய மரியாதை செய்யப்பட்டு, அவர்கள் நினைவுகூரப்படுவார்கள் என்று நம்புகிறேன்! அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கும், சீனாவின் அற்புதமான மக்களுக்கும் ஒரு சிறந்த, நீடித்த கொண்டாட்ட நாள் அமையட்டும்” என்றும் டிரம்ப் மேலும் தெரிவித்தார். அதன்பின் தனது விமர்சனத்தின் போக்கைக் கூர்மையாக்கி, அமெரிக்காவுக்கு எதிராகச் சீனா சதி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். “அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக நீங்கள் சதி செய்யும்போது, விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப்” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார். டிரம்ப் சீனா மோதல் டிரம்ப்பின் இந்த கருத்துகள், 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனா நடத்திய முதல் பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்பை ஒட்டி வந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் 80-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்கா-சீனா இடையே நிலவும் வர்த்தகப் பதட்டங்களுக்கு மத்தியில், ராஜதந்திர அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

















