
சண்டிகர், மே 2- பஞ்சாப் சட்டப்பேரவைக்கு மது போதையில் முதல்வர் பகவந்த் மான் வந்தார். இந்த செயல் அவமானம் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். இதனால் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிலையில் பேரவைக் கூட்டத்துக்கு முதல்வர் பகவந்த் மான் மது அருந்திவிட்டு வந்ததாக காங்கிரஸ், அகாலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்பால் சிங் கைரா தனது எக்ஸ் தளத்தில், ‘‘சட்டப்பேரவையில் முதல்வர் பகவந்த் மான் போதையில் இருந்தார். அவருக்கு மது போதை பரிசோதனை நடத்தப்பட வேண்டும். நாங்கள் (காங்கிரஸ்) அவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டோம். மேலும், நாங்களே முன்வந்து அந்தப் பரிசோதனையை மேற்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சிரோமணி அகாலி தளம் கட்சி தனது எக்ஸ் தளத்தில், ‘‘முதல்வரின் நடத்தையைச் சிரோமணி அகாலி தளம் வன்மையாகக் கண்டிக்கிறது; இந்நாளில் அவர் மது அருந்திய நிலையில் வந்திருக்கக் கூடாது. அவரை இன்றே ஒட்டுமொத்த பஞ்சாப் மாநில மக்களின் முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளது. பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் தளத்தில், ‘‘ஜனநாயகத்தின் ஆலயமாகத் திகழும் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று மீண்டும் மது போதையில் வந்துள்ளார். இது மிகப்பெரிய அவமானம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் மது அருந்தியிருந்தாரா என்பது தொடர்பாக உடனடியாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.


















