
மும்பை, அக். 2- மக்களிடமிருந்து விலகி, அவர்களின் கவலைகளைப் புறக்கணிக்கும் அரசுகள் மக்கள் கோபத்தைச் சந்திக்கும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரித்துள்ளார். நேபாளத்தில் நடந்த அரசியல் குழப்பங்களை உதாரணமாகக் காட்டி, அவர் இந்தக் கருத்தைச் சொன்னார். மேலும், ஒருவரின் கருத்து இன்னொரு மதத்தினரைப் புண்படுத்தும் வகையிலும் இருக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா அதன் நாக்பூர் தலைமையகத்தில் நடைபெற்றது. நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பு நாணயத்தை வெளியிட்டிருந்தார். இதற்கிடையே இரண்டாவது நாளான இன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தனது விஜயதசமி உரையை ஆற்றினார். மோகன் பகவத் இந்தியாவில் குழப்பங்களை உருவாக்க முயலும் சக்திகள் நாட்டிற்கு வெளியே மட்டுமின்றி, உள்ளேயும் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும், “நேபாளம், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் நடக்கும் புரட்சிகள் ஸ்திரமற்ற தன்மையை மட்டுமே கொண்டு வருகின்றன. இவை நிஜமாகவே கவலை தருகிறது. இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்க அரசு மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். அரசு மக்களிடமிருந்து விலகி, அவர்களின் பிரச்சனைகளை உணராமல் இருப்பது ஆபத்து. மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் உருவாக்கப்படாமல் இருந்தால், மக்கள் அரசுக்கு எதிராகத் திரும்புவார்கள்” என்றார். பின்னணி கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் அண்டை நாடுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய மூன்று நாடுகளிலும் இளைஞர் போராட்டம் வன்முறையாக வெடித்ததில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. 2022-ல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நடந்த போராட்டங்கள், ராஜபக்சே தலைமையிலான அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. வங்கதேசத்தில் மாணவர் போராட்டங்கள் ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்குக் காரணமாக இருந்தது. சமீபத்தில் நேபாளத்தில் ‘ஜென் Z’ போராட்டங்கள் கே.பி. சர்மா ஒலி அரசை காலி செய்தது. அரசு எப்போதும் மக்கள் சார்ந்ததாகவும், உணர்வுப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய மோகன் பகவத், அதேநேரம் வன்முறைப் போராட்டங்கள் யாருக்கும் நன்மை பயக்காது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். ஜனநாயக வழிகளில் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர் வலியுறுத்தினார். புரட்சி வேலைக்கு ஆகாது அவர் மேலும், “இதுவரை நடந்த அனைத்து அரசியல் புரட்சிகளின் வரலாற்றையும் பார்த்தால், அவை எதுவும் தங்கள் நோக்கத்தை அடைந்ததில்லை. வன்முறைப் போராட்டங்களால் எந்த நோக்கமும் நிறைவேறுவதில்லை.. மாறாக அந்நிய நாட்டுச் சக்திகளுக்கே ஒரு குழப்பத்தை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கிறது” என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவில் இருக்கும் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும், “நமது கருத்துகள் மற்ற மதத்தினர் அல்லது அவர்களின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.















