“மண்ணுக்குள் கிடைத்த வைரம்”… வாயை பிளக்க வைக்கும் மதிப்பு

போபால், டிச. 18- மத்திய பிரதேச மாநிலத்தில் இறைச்சி கடை மற்றும் பழக்கடை நடத்தி வரும் இருநண்பர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வைரம் தேடும் பணியில் ஈடுபட்டனர். விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மண்ணை தோண்டி அவர்களுக்கு 15.34 காரட் எடையுள்ள ஒரு உயர்தர வைரம் கிடைத்துள்ளது. இதனால் ஏழை நண்பர்களாக இருக்கும் இருவரின் வாழ்க்கையும் ஒரே நாளில் மாறிப்போயுள்ளது. இருவருக்கும் ஜாக்பாட்’ அடித்தது எப்படி? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் காதிக் (வயது 24). இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் பெயர் சஜித் முகமது. இவருக்கு வயது 23. இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். பன்னா மாவட்டம் மத்திய பிரதேசத்தில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இங்கு பெரிய அளவில் வளர்ச்சி என்பது இல்லை. மக்கள் வறுமை, தண்ணீர் பற்றாக்குறை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் நிறைய வைர சுரங்கங்கள் உள்ளன. பெரும்பாலான வைர சுரங்கங்கள் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் உள்ளூர் மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மாநில அரசு சார்பில் 3 மாதங்களுக்கு ஒருமுறை சிறிய அளவிலான நிலம் வைர சுரங்கத்தில் குத்தகைக்கு வழங்கப்படும். இப்படி குத்தகை எடுக்கும் மக்கள் அந்த இடங்களில் வைரம் தேடி கொள்ளலாம். இது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கலாம் என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை பின்பற்றி வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் ஏராளமானவர்கள் வைரம் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.