
மதுரை: அக். 30-
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நேற்று இரவு மதுரை வந்தார். அரசின் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர் இன்று காலை 8.20 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சிலைக்கு அருகில் இருந்த தேவர் படத்துக்கும் மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செய்தார். இதன்பின் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் அவர் மாலை அணிவித்தார். அதன் பிறகு கார் மூலமாக அவர் பசும்பொன் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பெரிய கருப்பன், அன்பில் மகேஸ், டிஆர்பி ராஜா, கீதா ஜீவன், கனிமொழி எம்பி, மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேவர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், பால் அபிஷேகம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.















