
மதுரை: மார்ச் 2-
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு, பணியிட மாற்றம், டெண்டர் ஒப்பந்தங்கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் மதுரை மண்டேலா நகரில் நேற்று நடைபெற்றது.இதில் பிரதமர் மோடி பேசியதாவது: இது பாண்டிய நாடு. வீரம் விளைந்த பூமி. இந்த மகத்தான பூமியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாவீரன் அழகு முத்துகோன், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர்கள், இமானுவேல் சேகரனாரின் பங்களிப்பை நினைவுகூர்கிறேன். மனசாட்சி இன்றி, ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகளிடம் இருந்து திருடுகின்றனர். இப்படிப்பட்ட ஊழல் அரசு மேலும் தொடர தார்மீக உரிமை இல்லை. மக்கள் தே.ஜ.கூட்டணி அரசை கொண்டுவர தீர்மானித்துவிட்டனர். எங்கள் கூட்டணி தூய்மையான, திறமையான ஆட்சியை வழங்கும்.

















