
புதுடில்லி, அக். 3- ‘’தொழில் துறையினருக்கு தேவையான அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது,’’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.மின்னணு பொருட்கள், பசுமை எரிசக்தி, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு, உயர் தொழில்நுட்பம் கொண்ட பொருட்கள் தயாரிப்புக்கு அரிய வகை கனிமங்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய கனிம வளத்தை அதிகமாக கொண்டிருக்கும் சீனா, அதை ஏற்றுமதி செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் அரிய வகை கனிமங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால், உற்பத்திக்கு தேவையான அரிய வகை கனிமங்கள், இந்திய தொழில் துறையினருக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:மின்னணு உற்பத்தித் தொழில்துறைக்கு அரிய வகை கனிமங்கள் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாத வகையில் வினியோக சங்கிலி சிறப்பாக உள்ளது. கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. பிற நாடுகளில் இருந்து அரிய வகை கனிமங்களைப் பெறுவதற்கான முயற்சிகளில் சுரங்க அமைச்சகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விரைவில் அதன் முடிவும் தெரிய வரும்.















