மன்னிப்பு கேட்ட கார் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை

துவாரகா, பிப். 18- நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான். எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை. டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 17 வயது சிறுவன் தனது சகோதரியுடன் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த சஹிலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீதும் மோதியுள்ளது. சஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்ஸி ஓட்டுநரும் காயமடைந்தார். அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், அவனுக்கு தேர்வுகள் இருப்பதாலும் நீதிமன்றம் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால் தனக்கு நீதி வேண்டும் என்றும்,
சிறுவனை வயது வந்தவராக கருதி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் விபத்தில் உயிரிழந்த சஹில் தனேஷ்ராவின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், சிறுவனிடம் காரைக் கொடுத்த அவனது தந்தை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த வீடியோ வைரலாகி, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்தது. இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தொழிலதிபர் தந்தை, ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இது ஒரு மிகப்பெரிய தவறு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என் குடும்பமே இந்தச் செயலால் கடும் அதிர்ச்சியிலும் அவமானத்திலும் ஆழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட தாயிடம் நான் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கோருவேன்.சம்பவம் நடந்த போது நான் வேலை விஷயமாக கோரக்பூரில் இருந்தேன்.
நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான். நான் டெல்லியில் இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்காது. நான் வீட்டில் இருக்கும்போது எப்போதும் கண்டிப்பாகவே இருப்பேன். நான் இல்லாதபோது அவனது தாயாரையும் மீறி அவன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளான்.
எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை. அங்கேயே இருந்து இருந்து உதவி செய்தான்.
எனது மனைவி போன் செய்து தகவல் சொன்னவுடன், உடனடியாகக் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி நான் அறிவுறுத்தினேன்” என்று தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய கார் சாலை விதிகளை மீறியதாக ஏற்கனவே பல அபராதங்களை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் வணிக ரீதியான தொழில் செய்து வருவதால், டிரைவர்கள்தான் பெரும்பாலும் இந்த வாகனத்தை ஓட்டுவார்கள். முந்தைய அபராதங்களுக்கு அதுவே காரணம்” என்று பதிலளித்தார்.