
புதுடெல்லி, மே 2-
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது மத்திய அரசு ஊழியர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று தள்ளுபடி செய்தது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை முறையாகப் பின்பற்றப்படும் என்று அதன் வழக்கறிஞர் அளித்த உறுதிமொழியைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக வேறு கூடுதல் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கத் தேவையில்லை எனத் தெரிவித்தது.
வாக்கு எண்ணிக்கைச் செயல்பாட்டில் மத்திய அரசு ஊழியர்களுடன் மாநில அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ஏப்ரல் 13-ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையைப் பின்பற்றுவதாக அளித்த உறுதியை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முன்னதாக, இதே விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கையின் போது திரிணாமுல் காங்கிரஸின் பிரதிநிதிகள் உடனிருப்பார்கள் என்றும், தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை விதிகளுக்கு முரணானது அல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் மீனாட்சி அரோரா ஆகியோர், “ஏப்ரல் 13-ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை ஏப்ரல் 29-ஆம் தேதிதான் மனுதாரரின் கவனத்திற்கு வந்தது. தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் முறைகேடு நடக்கும் என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்தது?” என்று கேள்வி எழுப்பினர்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ். நாயுடு வாதிடுகையில், “வாக்கு எண்ணிக்கைச் செயல்பாட்டின் முழுமையான கட்டுப்பாடு மாநில அரசு ஊழியரான தேர்தல் நடத்தும் அலுவலரிடமே இருக்கும். பணியாளர்களை அவரே தேர்வு செய்வார். ஏப்ரல் 13 சுற்றறிக்கை அதன் முழுமையான நோக்கத்தில் செயல்படுத்தப்படும். திரிணாமுல் காங்கிரஸின் கவலைகள் தேவையற்றவை,” என்றார். மேலும், ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேசையிலும் ஒரு மாநில அரசு ஊழியர் மற்றும் ஒரு மத்திய அரசு ஊழியர் முறையே மேற்பார்வையாளராகவும் உதவியாளராகவும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.
நீதிபதி தனது கருத்தில், “வாக்கு எண்ணிக்கை அதிகாரியை மத்திய அரசு பரிந்துரைத்தவர் என்று குறிப்பிடுவது பெரிய விஷயமல்ல. இத்தகைய முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. மேலும், ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் ஏஜெண்டுகள் அங்கே இருப்பார்கள். மைக்ரோ அப்சர்வர் ஏற்கனவே மத்திய அரசு அதிகாரியாக இருக்கும்போது, இந்த ஏற்பாட்டில் தவறு ஏதுமில்லை,” என்று குறிப்பிட்டார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு மம்தா பானர்ஜிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


















