மழை பெய்தால் சாலையில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்

குருகிராம், ஆகஸ்ட் 4- ‘’கனமழை பெய்தால் சாலையில் மழைநீர் தேங்கும். சக்தி வாய்ந்த நாடு எனக் கூறிக் கொள்ளும் அமெரிக்காவிலேயே சாலையில் மழைநீர் தேங்குகிறது,’’ என, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு குருகிராம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், முக்கிய வர்த்தக நகரமான குருகிராமின் பல்வேறு இடங்களில், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. இந்நிலையில், மழை நிலவரம் குறித்து, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இயற்கையை எதிர்கொள்ள முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கனமழை பெய்தால் சாலையில் மழைநீர் தேங்கும்; பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே சமயம், கனமழையை எதிர்கொள்ளும் வகையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். குருகிராம் வளர்ந்து வரும் நகரம். இங்கு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. அமெரிக்காவை பாருங்கள்… உலகிலேயே சக்தி வாய்ந்த நாடு என கூறிக் கொள்கிறது. எனினும், கனமழையால் அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணமே வெள்ளத்தில் மூழ்கியது. எனவே, எங்கு கனமழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படும் என்பதை நாம் புரிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.