புதுடில்லி, செப்டம்பர் 4- போட்டித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக தேர்வு எழுதுவோரை நியமிப்பதில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மத்திய அரசுப் பணிகளில் சேர விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் தேர்வு எழுத முடியாத பட்சத்தில், அவர்களுக்கு உதவியாக தேர்வு எழுத வேறு நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நபர், மாற்றுத்திறனாளியின் விருப்பத்தின் பேரிலும் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு எழுதும் நபர்களால் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவோரை நியமிப்பதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வர்களால் முறைகேடுகள் நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சொல்வதை கேட்காமல், தேர்வர்கள் தாங்களாகவே சொந்தமாக எழுதுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.















