மியான்மரில் சிக்கி தவித்த 370 இந்தியர்கள் மீட்பு

புதுடில்லி, நவ. 22- மியான்மரில், அதிக சம்பளத்துடன் கூடிய வேலை இருப்பதாக கூறியதை நம்பி, மோசடி கும்பலிடம் சிக்கிய 370 இந்தியர்களை, அந்நாட்டு போலீசார் பத்திரமாக மீட்டனர். தனி விமானங்கள் வாயிலாக அவர்கள் அனைவரும் நாடு திரும்பினர். இதில், 55 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில் உள்ள மியாவாடி நகரில், அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு காத்திருப்பதாக, ‘வாட்ஸாப், டெலிகிராம்’ போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் வாயிலாக தகவல் பரவின. இதை நம்பி, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் அப்பணிக்கு சென்றனர். அங்கு அவர்களை ஏமாற்றி பாஸ்போர்ட், பணம், ‘மொபைல் போன்’ உள்ளிட்ட அனைத்தையும் மோசடி கும்பல் பறித்துக் கொண்டது. மியான்மர் – தாய்லாந்து எல்லையில் உள்ள மயாவாடி என்ற இடத்தில் உள்ள கே.கே.பார்க் என்ற இடத்தில், போலி கால் சென்டரில் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. அங்கிருந்தபடி, ‘ஆன்லைன்’ வாயிலாக பணம் பறிக்கும் மோசடி வேலையில் இந்தியர்களை ஈடுபட வைத்தனர். அங்கிருந்து தப்ப முடியாமல் தவித்து வந்தவர்களை அந்நாட்டுப் போலீசார் சமீபத்தில் மீட்டனர். இதைத்தொடர்ந்து, நம் துாதரக அதிகாரிகளின் உதவியுடன் மூன்று தனி விமானங்களில் அவர்கள் டில்லிக்கு நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர்.இதில், 55 பேர் ஆந்திராவின் விஜயவாடா, விசாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது