மிரட்டல்; வங்கதேச துாதருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி, டிச. 18- இந்தியாவுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் வங்கதேச அரசியல் தலைவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அந்நாட்டு துாதரை நேரில் அழைத்து நம் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில், மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, கடந்த ஆண்டு ஆக., 5ம் தேதி, பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. அங்கிருந்து தப்பிய ஹசீனா, நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். அதன் பின் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி டாக்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தேசிய குடிமக்கள் கட்சித் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, ‘இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுராவை பிரிவினைவாத குழுக்களை வைத்து துண்டாடுவோம். ‘இந்திய விரோத சக்திகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் வங்கதேசத்தில் அடைக்கலம் தருவோம். ‘வங்கதேசத்தின் இறையாண்மை, ஓட்டுரிமை, மனித உரிமைகளுக்கு மதிப்பு தராதவர்களுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்தால், அதை பார்த்து சும்மா இருக்க மாட்டோம். தக்க பதிலடி கொடுப்போம்’ என, மிரட்டல் விடுத்திருந்தார்.