
பாட்னா, நவ. 4- பீகாரில் பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள் தேர்தல் நாளில் நடமாட முடியாது என்று பகீரங்க மிரட்டல் விடுத்த ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீகாரில் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடத்தப்பட உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், ஏழைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கக்கூடாது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தேர்தல் நாளில் பாஜகவினர் ஏழைகளை வீட்டில் அடைத்து வைக்க வேண்டும் என்றும் மிகவும் மன்றாடினால் அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர் லாலன் சிங் கூறினார். பீகாரில் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் தேர்தல் நாளில் நடமாட முடியாது என்று லாலன் சிங் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் பீகார் மக்களுக்கு மிரட்டல் விடுத்த ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.















