புதுடில்லி, நவ. 21- இந்தாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ், 25, தேர்வு செய்யப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் என்பது தாய்லாந்து மற்றும் மெக்சிகோவை தளமாகக் கொண்ட மிஸ் யுனிவர்ஸ் அமைப்பால் நடத்தப்படும் வருடாந்திர போட்டியாகும். தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் 74வது மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டி நடந்தது. இதில் இந்தியா சார்பில், சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த அழகி போட்டியில் இந்திய அழகிய தேர்வு செய்யப்பட்ட மணிகா விஸ்வகர்மா போட்டியிட்டார்.போட்டியின் இறுதி சுற்றில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வெற்றி பெற்று, 2025ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி சென்றார். முதல் ரன்னர் அப் ஆக தாய்லாந்து அழகியும், இரண்டாம் ரன்னர் அப் ஆக வெனிசுலா அழகியும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற பாத்திமா, நடனம் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இறுதிப்போட்டியின் நடுவர்களில் ஒருவராக பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பணியாற்றினார். இந்தியா சார்பில் போட்டியிட்ட மணிகா விஸ்வகர்மாவால் முதல் 12 இடங்களுக்கு வரமுடியவில்லை. அவர் முன்னதாக நடந்த ஸ்விம் சூட் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறினார்.















