
நியூயார்க்: நவம்பர் 20- சவுதி அரேபியாவை ‘நேட்டோ’ அல்லாத முக்கிய கூட்டணி நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆயுத விற்பனை, அணுசக்தி ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளார்.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு, அதிபர் டிரம்ப் விருந்தளித்தார்.
இருதரப்பு உறவு
இதைத் தொடர்ந்து நடந்த சந்திப்பில், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இருவரும் பேச்சு நடத்தினர்.
முடிவில், சவுதி அரேபியாவை, ‘நேட்டோ’ அல்லாத முக்கிய கூட்டணி நாடு என்று டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது, ‘நேட்டோ’ அமைப்பு.
இதில் இல்லாத சில நாடுகளுக்கு அமெரிக்கா இந்த அந்தஸ்தை வழங்குகிறது. இதன் மூலம், அந்த நாடுகள் அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களை வாங்கலாம்.
ராணுவப் பயிற்சி, தளவாடங்கள் வாங்க அமெரிக்காவிடமிருந்து கடன் அல்லது மானியம் பெறலாம். உளவுத்துறை தகவல்கள் பகிர்வு, கூட்டுப் பயிற்சி போன்றவை அதிகரிக்கும். ஆனால், ‘நேட்டோ’ நாடுகளுக்கு இருப்பது போன்ற ராணுவப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படாது.
ரூ.88 லட்சம் கோடி
இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவுக்கு 48 ‘எப் – -35’ போர் விமானங்கள், 300 ராணுவ பீரங்கிகள் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். அத்துடன், அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் சவுதியில் எளிதாக செயல்பட அனுமதிக்கும் வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதேபோன்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில், 88 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இதில், ‘எப்- – 35’ போர் விமானங்களுக்கு மட்டும் 12 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அமெரிக்கா- – சவுதி இடையிலான இந்த புதிய ஒப்பந்தங்கள், மேற்காசியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.


















