
கல்யாணி, பிப். 19- ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான பெங்கால் – ஜம்மு & காஷ்மீர் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மேற்கு வங்கத்தில் உள்ள கல்யாணி பகுதியில் உள்ள பெங்கால் கிரிக்கட் அகாடமி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் பெங்கால் அணி 328 ரன்களும் ஜம்மு & காஷ்மீர் அணி 302 ரன்களும் எடுத்தன. 26 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பெங்கால் அணி 25.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷாபாஷ் அகமது 24, சுராஜ் சிந்து ஜெஸ்வால் 14, அனுஸ்டுப் மஜும்தார் 12, முகமது ஷமி 11 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். ஜம்மு & காஷ்மீர் அணி தரப்பில் அகிப் நபி, சுனில் குமார் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். யுத்விர் சிங் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 126 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வன்ஷாஜ் சர்மா 83 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், அப்துல் சமத் 27 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷுபம் பந்திர் 27, கேப்டன் பராஸ் டோக்ரா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜம்மு & காஷ்மீர் அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் ஜம்மு & காஷ்மீர் அணி அறிமுகமாகி 67 ஆண்டுகளில் முதல்முறையாக தற்போதுதான் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. கர்நாடகா 802 ரன் முன்னிலை மற்றொரு அரை இறுதியில் கர்நாடகா – உத்தராகண்ட் அணிகள் லக்னோவில் விளையாடி வருகின்றன. இதன் முதல் இன்னிங்ஸில் கர்நாடகா 736 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 232, கே.எல்.ராகுல் 141, ரவிச்சந்திரன் சமரன் 135 ரன்கள் விளாசினர். இதையடுத்து விளையாடிய உத்தராகண்ட் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 503 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய கர்நாடக அணி ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. அந்த அணி 802 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


















