புதுடில்லி, ஆகஸ்ட் 20-ஊழல் புகார் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகும் போது பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதா இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வர என்ன காரணம்.. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு மசோதாக்களைக் கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டாலும் கூட அதையும் தாண்டி முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே இன்றைய தினம் மத்திய அரசு 3 மசோதாக்களை கொண்டு வருகிறது. 3 மசோதா ஆன்லைன் கேமிங், காஷ்மீர் மாநில அந்தஸ்து மற்றும் பிரதமர், முதல்வர்கள் பதவிநீக்கம் என 3 மசோதாக்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதில் பிரதமர், முதல்வர்கள் பதவிநீக்கம் செய்யும் மசோதா ரொம்பவே முக்கியமானது. இந்த மசோதா குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது நாட்டில் தற்போதுள்ள சட்டப்படி முதல்வர் அல்லது அமைச்சர் குற்ற வழக்கில் கைதானாலும் கூட பதவியைத் தொடரலாம். டெல்லி மாஜி முதல்வர் கெஜ்ரிவால், தமிழகத்தில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்ட போதும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தனர். காவலில் இருக்கும் ஒருவர் முதல்வர் அல்லது அமைச்சராக இருக்க முடியாது என்று எந்தவொரு சட்டமும் இல்லாததே இதற்குக் காரணமாகும். 30 நாள் சிறையில் இருந்தால் பதவிநீக்கம் இந்தச் சூழலில் தான் இதை மாற்றும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கிய மசோதாவை கொண்டு வர இருக்கிறது. இதன்படி பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது அல்லது காவலில் எடுக்கப்பட்டால் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவார்கள். இந்தச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்கும் குற்றங்களுக்குத் தொடர்ந்து 30 நாட்கள் கைது அல்லது காவலில் வைக்கப்பட்டால், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.














