முதல்வர் கடும் விமர்சனம்

சென்னை: நவம்பர் 9-
கட்சி தொடங்கியதும் அடுத்த முதல்வர் என்று அறிவித்து ஆட்சிக்கு வரவில்லை. வரலாறு தெரியாமல் திமுகவை வீழ்த்திவிடலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுகவின் 75-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி திமுக இளைஞரணி சார்பில் ‘திமுக -75 அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முற்போக்கு புத்தகக் காட்சி, ‘இருவண்ண கொடிக்கு வயது 75’ இரண்டு நாள் கருத்தரங்கம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். திமுகவின் 75 ஆண்டு கால வரலாறு குறித்த 1,120 பக்கங்களுடன் கூடிய ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலையும் அவர் வெளியிட்டார்.
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: சாமானியர்களால் தொடங்கப்பட்டு 1967-ல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கட்சி திமுக. ஏதோ கட்சியைத் தொடங்க வேண்டும், அடுத்த முதல்வர் நான்தான் என்று அறிவித்து திமுக ஆட்சிக்கு வரவில்லை. கட்சியின் தலைவர்களில் இருந்து, கடைக்கோடித் தொண்டர் வரை சுற்றிச்சுழன்று பணியாற்றி 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். எத்தனை கூட்டங்கள், போராட்டங்கள், சிறைவாசங்கள், தியாகங்கள், துரோகங்கள்.
இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது. சரிபாதி மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருந்த காலகட்டத்தில் இருந்து சைக்கிள் கடை, டீ கடை என ஒரு இடம் விடாமல் மக்களின் சிந்தனையைத் திருத்தும் மையமாக திமுக செயல்பட்டிருக்கிறது. திமுக பெற்ற வெற்றி, இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை. இந்த வரலாற்றையெல்லாம் பற்றி தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். இன்னும் சில அறிவிலிகள் திமுகவை வீழ்த்தி வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கின்றனர்.
திமுக-வை வீழ்த்தி வெற்றிபெற திமுக-வைப் போல் உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுக தான். திமுக பேசும் சமூக நீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி இன்றைக்கு இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலே திமுகவின் 75 ஆண்டு கால வரலாற்றையும், சாதனைகளையும் சொல்லும். இதில் திராவிட இயக்கத்துக்கு சார்பானவர்கள் மட்டும் அல்ல, திராவிட இயக்கத்தை விமர்சிப்பவங்களும் கூட கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.