
புதுடெல்லி: ஆக.22-
ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டையும் தாண்டி, முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்சியை அடையும் வாய்ப்புள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டது.ஆனால் இந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்தபோது, அது 6.9 சதவீதம் என காட்டுகிறது. அதனால் 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தோராயமாக 6.8 முதல் 7 சதவீதமாக இருக்கும் என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. முந்தைய காலாண்டுகளை வளர்ச்சி பாதையை ஆய்வு செய்து இந்த முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு முழுவதும் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது. இது ரிசர்வ் வங்கியின் முழு ஆண்டு இலக்கான 6.5 சதவீதத்தை விட குறைவு. 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான மற்றும் பெயரளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு இடையேயான இடைவெளி குறைவது குறித்தும் இந்த அறிக்கை ஆலோசித்தது. 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்த இடைவெளி 12 சதவீதமாக இருந்தது.
அது 2025-ம் ஆண்டு நிதியாண்டில் நான்காவது காலாண்டில் 3.4 சதவீதமாக குறைந்தது. 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த இடைவெளி மேலும் குறையும் என இந்த அறிக்கை கூறுகிறது. அதன்படி 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.