
பாட்னா, நவ. 14- பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நிதிஷ் – பாஜக கூட்டணி, தேஜஸ்வி – காங்கிரஸ் கூட்டணி களத்தில் மோதிக் கொண்டிருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறார்கள். பிரபல பாடகியும், பாஜகவின் இளம் வேட்பாளருமான மைதிலி தாகூர் அலிநகர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தேசியளவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அங்கு மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அங்கு கடந்த நவம்பர் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தலும், நவம்பர் 11 ஆம் தேதி 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
பீகார் தேர்தல் களம் கடந்த 75 வருட பீகார் அரசியலில் இல்லாதளவுக்கு 66.91 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர். ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது. மறுபக்கம் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது. மேலும் பிரபல தேர்தல் வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரும் களத்தில் உள்ளார். 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கும். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நிதிஷ் – பாஜக கூட்டணியே மீண்டும் அரியணை ஏறும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2020 சட்டமன்ற தேர்தலை போலவே ஆர்ஜேடி அதிக வாக்கு சதவீதத்துடன் இந்த முறையின் பீகாரின் தனிப்பெரும்பான்மை கட்சி என்ற பெருமையை எட்டும் என்று கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, பிறகு மின்னணு வாக்கு இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் இருந்தே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 9 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 133 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 91 தொகுதிகளிலும், ஜன்சுராஜ் கட்சி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார்கள். இந்த தேர்தலில் பாஜகவின் இளம் பெண் வேட்பாளர் மைதிலி தாகூர் அதிக கவனம் ஈர்த்துள்ளார். 25 வயதே ஆன மைதிலி பீகார் மாநிலத்தின் பிரபல பாடகி ஆவார். பாஜகவில் இணைந்த அடுத்த நாளே அவரை அலிநகர் தொகுதி வேட்பாளராக அறிவித்தனர். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
















