
மூணாறு: ஆக.12-
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ் சாலையில் மூணாறில் அரசு தாவரவியல் பூங்கா அருகே மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுனர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
அங்கு ஜூலை 26ல் இரவில் ஏற்பட்ட மண் சரிவில் மினி லாரி சிக்கி டிரைவர் கணேசன் 58, இறந்தார். அதே பகுதியில் ஜூலை 27ல் காலை கடுமையாக நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று நாட்கள் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து கேரளா பல்கலை புவியியல் துறை உதவி பேராசிரியர் சஜின்குமார் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வல்லுனர் குழு நவீன கருவிகளுடன் ஆய்வு நடத்தினர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு பகுதியில் மட்டும் தான் மண், பாறை ஆகியவை சரிந்தன. மீதமுள்ள இடத்தில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர தேசிய நெடுஞ்சாலையில் சரிந்த மண், பாறை ஆகியவை தாவரவியல் பூங்காவின் ஒரு பகுதியில் தள்ளப்பட்டுள்ளன. பலத்த மழை பெய்யும் பட்சத்தில் அது சரியும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்தது.இதேபகுதியில் 2018 ஆக. 15, 16 ஆகிய நாட்களில் பெய்த கன மழையில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் அரசு கல்லூரி கட்டடங்கள் சேதமடைந்தன.
அப்போது புவியியல் வல்லுனர்கள் நடத்திய ஆய்வில் மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரியவந்ததால் கல்லூரி வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.