
மைசூரு: ஜூன் 30-
மைசூரு அருகே புலியைப் பிடிப்பதற்காக நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின் (கூம்பிங்) போது, வனக்காவலர் ஒருவரை புலி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த வனக்காவலர், நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
சரவூர் அடுத்த பெண்ணெகெரே கிராமத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, கிரண் என்ற விவசாயியை புலி ஒன்று தாக்கியது. இதனால் கிராம மக்கள் கடும் பீதியடைந்தனர். இதையடுத்து, அந்தப் புலியைப் கூண்டில் அடைக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வனத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில், புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள புதருக்குள் பதுங்கியிருந்த புலி, திடீரென பாய்ந்து வந்து வனக்காவலர் குமார் என்பவரைத் தாக்கியது.
புலி தாக்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வனத்துறை ஊழியர்கள், பயங்கரமாக சத்தம் போட்டு அலறினர். சத்தத்தைக் கேட்டு மிரண்ட புலி, வனக்காவலரை விட்டுவிட்டு மீண்டும் புதருக்குள் ஓடி மறைந்தது. இதில் குமாரின் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, விவேகானந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த வனக்காவலர் குமார், சாமராஜநகர் மாவட்டம் குண்ட்லுபேட்டையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பியோடிய புலியைப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


















