புதுடெல்லி: நவ. 6-
ஹரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 25 லட்சம் வாக்குகளை திருடி பாஜக ஆட்சியைப் பிடித்ததாக ஆதாரங்களை வெளியிட்டு ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் சேர்ந்து, தேர்தல் ஆணையம் சதி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.பிஹார் மாநில முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா தேர்தலின்போது, அனைத்து கருத்துக் கணிப்புகளுமே காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்று தெரிவித்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்தன. வாக்குத் திருட்டின் மூலம் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டன.
இதற்கான 100 சதவீத ஆதாரங்களை “எச்-பைல்ஸ்” ஆக காங்கிரஸ் தொகுத்துள்ளது. அதில், ஒவ்வொரு வாக்கும் எவ்வாறு திருடப்பட்டுள்ளது என்று சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவைப் போலவே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிர மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் வாக்குத் திருட்டுகள் நடைபெற்றுள்ளன. இதனால் நாட்டின் ஜனநாயக முறை சிதைக்கப்பட்டுள்ளதுடன், ‘ஜென் ஸீ’ இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமும் அழிக்கப்பட்டுள்ளது. இதை இளைய தலைமுறை புரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
ஹரியானா தேர்தலில் ஒரு நபர், ஒரே புகைப்பட அடையாள அட்டையைக் கொண்டு 2 வாக்குச் சாவடிகள் மூலம் 223 வாக்குகளை செலுத்தியுள்ளார். ஆனால், அதற்கான சிசிடிவி ஆதாரங்களை தேர்தல் ஆணையம் அழித்துவிட்டது.
ஹரியானா வாக்காளர் பட்டியலில் 1.24 லட்சம் வாக்காளர்களின் போட்டோ போலியானது. 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இதில் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள், 93,174 செல்லாத வாக்குகள், 19.26 லட்சம் “பல்க்” வாக்காளர்கள் (ஒரே முகவரியில் பல வாக்காளர்கள்) அடங்குவர். 8 பேரில் ஒருவர் போலி வாக்காளர். ஒரே நபர் 18 முறை வாக்களித்துள்ளார். காங்கிரஸ் வெற்றியை தடுப்பதில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கைகோத்து செயல்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் பாஜகவுடன் சேர்ந்துகொண்டு, ஹரியானாவில் காங்கிரஸின் வெற்றியை தடுத்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கூட்டு சேர்ந்து, நாட்டின் ஜனநாயக அடித்தளத்தை அழித்து விட்டது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.ஜென் ஸீ இளைஞர்களின் வாக்குகளை திருடி பாஜக வெற்றி பெறுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டிய நிலையில், அதற்கு மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான கிரண் ரிஜிஜு அளித்த பதிலில், “அடிப்படை ஆதாரமற்ற கட்டுக்கதைகள் மூலம் ஜென் ஸீ இளைய தலை முறையினரை தூண்டிவிடும் நடவடிக்கையில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். ஹரியானா வாக்காளர் பட்டியலுக்கு எதிராக இதுவரை யாரும் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. தோல்விகளை மறைக்கவே இவ்வாறான பொய் குற்றச்சாட்டுகளை ராகுல் அவ்வப்போது பரப்பி வருகிறார்” என்றார்.















