மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்

கெய்ரோ; அக்டோபர்14-இந்தியா சிறந்த நாடு, அந்நாட்டின் பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் என்று காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி முன்னிலையில், வரலாற்று சிறப்புமிக்க காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்ப், அப்தெல் பட்டா அல் சிசியுடன் துருக்கி அதிபர் எர்டோகன், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள ஷரத்துகள் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவையும், பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார். அவர் உரையாற்றும் போது பின்னால் பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நின்று கொண்டு இருந்தார்.
டிரம்ப் பேசுகையில், இந்தியா மிகவும் சிறந்த நாடு. என் நல்ல நண்பர்கள் என்ற பட்டியலில் உச்சத்தில் இருப்பவர் பிரதமர் மோடி. அவர் அற்புதமான ஒரு வேலையை செய்திருக்கிறார். பாகிஸ்தானும், இந்தியாவும் மிகவும் நன்றாக வாழப்போகிறார்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தானே (பின்னால் நின்றிருக்கும் பாக். அதிபர் ஷெபாஸ் ஷெரிப்பை திரும்பி பார்க்கிறார் டிரம்ப்).
என்னை பொறுத்தவரை அவர்கள் இருவரும் சிறந்த தலைவர்கள் என்று நினைக்கிறேன் என டிரம்ப் பேசினார்.
பின்னர் தொடர்ந்து உரையாற்றிய டிரம்ப், பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை கைகாட்டி, இந்தியா, பாக், அணுசக்தி மோதலை தடுத்ததற்கு அவரை பாராட்டினார்.
இந்த மனிதர் இல்லை என்றால், அந்த 4 நாட்களில் (ஆபரேஷன் சிந்தூர் பற்றி குறிப்பிடுகிறார்) என்ன நடந்தது என்று யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு போர்ச்சூழல் அதிகரித்து இருக்கும் என்றும் கூறினார்.