
வாஷிங்டன், டிச. 13- தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மோதலை நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்னை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால் இரு நாடுகளுக்கிடையே கடந்த அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு, அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டது. எல்லையில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்; எட்டு வீரர்கள் காயமடைந்தனர். பதிலுக்கு தாய்லாந்து ராணுவம் விமானப்படை மூலம் கம்போடியா மீது தாக்குதல் நடத்தியது. இன்னும் மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் 1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரீயா விஹார் கோவில் சேதம் அடைந்தது. இந்நிலையில் மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் நான் பேச்சு நடத்தினேன். மோதல் தொடர்பாக மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உதவியுடன் ஆலோசனை நடத்தினேன். இதன் பயனாக தாய்லாந்து- கம்போடியா நாடுகள் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய சம்மதித்துள்ளன. இரு நாடுகளும் அமைதிக்குத் தயாராக உள்ளன. மேலும் அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போராக உருவாகி இருக்கக்கூடியதைத் தீர்ப்பதில் பணியாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்த மரியாதை ஆகும். இந்த மிக முக்கியமான விஷயத்தில் உதவியதற்காக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

















