
புதுடெல்லி: அக். 2-
மத்தியப் பிரதேசத்தின் 27 மதரஸாக்களில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டுள்ளது. ‘இது, மதமாற்ற முயற்சியா?’ எனக் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் ம.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
556 இந்து குழந்தைகளுக்கு குர்ஆன் கற்பிக்கப்படுவதும், மத்தியப் பிரதேசத்தில் 27 மதரஸாக்கள் மதமாற்றத்திற்குத் தயாராகி வருவதும் ஏன்? என மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால், ஹோஷங்காபாத், ஜபல்பூர், ஜபுவா, தார், பர்வானி, காண்ட்வா, கார்கோன் மற்றும் பராசியா மாவட்டங்களில் அரசு அனுமதி பெறாத பல மதரஸாக்கள் செயல்படுகின்றன.
இவற்றில், இந்து குழந்தைகளும் இணைந்து கல்வி பயில்கின்றனர். அந்த 556 இந்து குழந்தைகளுக்கு அந்த மதரஸாக்களில் புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்படுவது தெரிந்துள்ளது.
இந்த முயற்சி, அந்த இந்து குழந்தைகளை இஸ்லாத்திற்கு மாற்ற மதரஸாக்கள் அழுத்தம் கொடுத்ததாகப் புகார் கிளம்பியுள்ளது. இது குறித்த தகவல் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகாராக அனுப்பப்பட்டுள்ளது.
இதை விசாரணைக்கு எடுத்த ஆணையம், பாஜக ஆளும் ம.பி அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், மதரஸாக்களில் இந்து குழந்தைகளை இஸ்லாத்திற்கு மாற்றும் நடவடிக்கை நடைபெறுகிறதா? எனக் கேள்வியும் எழுப்பப்பட்டு உள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் இந்த நோட்டீஸ் ம.பி.யின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீது விசாரணை நடத்தி ஆணையத்திற்கு அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான பிரியங்க் கனூங்கோ கூறுகையில், ‘கடந்த செப்டம்பர் 26-ம் தேதி அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்ற கும்பல் செயல்படுவதாகக் கூறி ஆணையத்திற்கு புகார் வந்தது.
முஸ்லிம் அல்லாத குழந்தைகளை மதரஸாக்களில் எப்படி சேர்க்க முடியும்? இதுபோன்ற பெரும்பாலான மதரஸாக்கள் அரசாங்க அனுமதியின்றி இயங்குவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
சிறார் நீதிச் சட்டம் 2015 மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 28(3) ஆகியவை அனுமதியின்றி மதக் கல்வியைத் தடைசெய்துள்ளது. இந்த மதரஸாக்களில் உள்ள இந்து குழந்தைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
அனுமதியின்றி செயல்படும் மதரஸாக்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யவும் ஆணையம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பதிலை அரசு 15 நாட்களில் ஆணையத்திடம் அனுப்பும்படி கோரியுள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.















