யூனுஸ் அரசுக்கு ஹசீனா மகன் நேரடி சவால்

டாக்கா, நவ. 21- வங்கதேச மாஜி பிரதமர் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவரது மகன் சஜீப் வாஜெட் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வங்கதேசத்தில் இப்போது சட்டவிரோத ஆட்சி நடப்பதாக கூறிய அவர், முடிந்தால் ஹசீனாவை தொட்டு பாருங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு திடீரென வெடித்த போராட்டம் மாபெரும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் பல நூறு பேர் உயிரிழந்தனர். அப்போது தான் அங்குப் பிரதமராக இருந்த ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்தார். தொடர்ந்து அங்கு யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. கடந்தாண்டு நடந்த வன்முறை தொடர்பான வழக்கில்.. ஹசீனா மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளதாகச் சொல்லி.. வங்கதேச சிறப்பு நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் வசித்து வரும் ஹசீனாவை நாடுகடத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்திருக்கிறது. இதற்கிடையே மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜெட் அளித்துள்ள நேர்காணலில்.. முகமது யூனுஸ் அரசு மீது சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.